Thursday, August 9, 2012

கோகுலாஷ்டமியாம்!!!!

 கோகுலாஷ்டமியாம்!!!!

தமிழ்நாடு அரசு புதிய ஆணை ஒன்றை நேற்று அவசர அவசரமாகப் பிறப்பித்துள்ளது. கோகுல கிருஷ்ணன் பிறந்தது செப்டம்பர் எட்டாம் தேதி என்று ஏற்கெனவே அரசு ஆணை பிறப்பித்து அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப் பட்டது. அது தவறு, கிருஷ்ணன் பிறந்தது ஆகஸ்டு 9 ஆம் தேதிதான். எனவே செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்டு (இரவு) ஒன்பதாம் தேதியே அரசு விடுமுறை நாள் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.
பிறப்பு, இறப்பு அற்றவன் கடவுள் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கம் கடவுளுக்குப் பிறந்த நாள் என்று சொல்லி அரசு விடுமுறை விடும் நகைச் சுவைகளை எல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் பார்க்கலாம்.
அதுசரி, அவன் பிறந்தநாளில் கூட ஏன் இப்படித் தடுமாற்றம்? சரி, கதைக்கு வருவோம்.
இந்தக் கிருஷ்ணன் யார்? வசுதேவருக்கு, தேவகி வயிற்றில் அவதரித்தார் என்கிறது ஒரு புராணம்; இன்னொரு புராணம் என்ன சொல்லுகிறது?
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது. இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை. அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தார்? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தான். ஒன்று கருப்பு நிறம்; அவன்தான் கிருஷ்ணன்; இன்னொன்று வெள்ளை மயிர் - அவன்தான் கிருஷ்ணனின் அண்ணனாம்.  இதனைக் கூறுவது அபிதானகோசம் ஆகும்.
இப்படிப் பிறந்த ஒரு கடவுளுக்குத்தான் அரசு விடுமுறை விடுகிறது. இந்த விடுமுறை நாளில் அரசு அலுவலர்கள் என்ன செய்யப் போகி றார்களாம்? கிருஷ்ண கடவுளைப் பற்றிப் புராணங் களில் உள்ளதைப் படிக்க ஆரம்பித்தால் மனிதன் என்னாவது? வீடு என்னாவது? நாடு என்னாவது?
சின்ன வயதில் வெண்ணெயைத் திருடியவன் என்றும், வாலிப வயதில் பெண்களைத் திருடிய வன் என்றும்,  பள்ளிக்குச் செல்லாத தம் பிள்ளை களிடம் இன்று தாய் சொன்னால் அந்தப் பிள்ளையின் மனநிலை எந்த நிலைக்கு ஆளாகும்?
கடவுள் என்றால் ஒழுக்கம் உள்ளதாக இருக்க வேண்டாமா? கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று தந்தை பெரியார் சொன்னால் மூக்கின் மேல் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறதே - நியாயமாக பக்தர்களுக்கு யார் மீது கோபம் வெடித்துக் கொண்டு கிளம்பவேண்டும்?
இப்படியெல்லாம் ஆபாசமாகக் கடவுள் பிறந்தார் என்று எழுதி வைத்துள்ள புராணக் குப்பைகள்மீது அல்லவா கோபம் துடிதுடித்துக் கிளம்பவேண்டும் - அந்தப் புராணக் குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்த அல்லவா விரும்ப வேண்டும்?
இன்னும் கிருஷ்ணன் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தால் அது ஆபாசச் சாக்கடையாக அல்லவா இருக்கும். ஒன்றல்ல; இரண்டல்ல; அறுபதாயிரம் கோபிகா ஸ்திரீகளுடன் கொஞ் சினான் கோகுலகிருஷ்ணன் என்பது அருவருப் பானது அல்லவா?
கிருஷ்ணன் கோகுலத்தில் ராதையுடன் கூடி இருக்கையில் விரஜை, கங்கை கிருஷ்ணனைக் கண்டு மோகிக்க, ராதை கோபித்தது  கண்டு கங்கை மறைந்தனள். அதனால் உலகெங்கும் நீரிலாது மறைய பிரமன் முதலியோர் கண்ணனை வேண்ட, கிருஷ்ணன் கங்கை வெளிப்படின் இராதை அவளை வாயிலிட்டு உமிழக் காத்திருக் கிறாள். ஆதலால் இராதைக்கு சமாதானம் கூறுங்கள் என்றானாம். பிரமன் முதலியோர் இராதையைத் துதித்தனராம். பின்னர் கிருஷ் ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளி வந்தனள். இப்படியாகக் கதை போய்க் கொண்டே இருக்கிறது. (ஆதாரம்: அபிதான சிந்தாமணி)
இதில் உள்ள ஆபாசத்தையும், முழுமுட்டாள் தனத்தையும் என்னவென்று சொல்ல! இதற்கு ஓர் அரசு, விடுமுறை விடுகிறது என்றால் இந்த அரசாங்கங்களைத்தான் என்ன சொல்ல!
சினிமாவில் வழியும் ஆபாசத்தைப் பற்றிப் பேசுபவர்கள்கூட இந்தக் கடவுள் தொடர்பான ஆபாசங்களைப் பக்திக் கிண்ணத்தில் வைத்துப் பருகுவார்களே - வெட்கக்கேடு!

Friday, July 13, 2012

12 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம்.

2001ஆம் ஆண்டு இதே நாளில் கோவையில் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் தோழர்கள் கோவை கு.இராமகிருட்டிணன், விடுதலை க.இராசேந்திரன் ஆகியோரை பொதுச்செயலாளராகக்கொண்டு பெரியாரிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து பெரியார் திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. 12 ஆம் ஆண்டில் புதிய வேகத்தில் – புதிய கோணத்தில் பெரியார் திராவிடர் கழகம் தனது பயணத்தை தொடர உள்ளது.


தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை திராவிடர் கழகம் நீர்த்து போக செய்துவிட்ட பின்னர் “ பெரியார் பாசறை “ தூத்துக்குடியில் துவக்கப்பட்டது. பால்.பிரபாகரன் அவர்களை அமைப்பாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாசறை தூத்துக்குடி & விருதுநகர் மாவட்டங்களில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை வளர்த்தது.
தந்தை பெரியாரின் கொள்கைகள் முழுமையும் செயல் வடிவம் காண எந்த பலமும் இல்லாமல் தந்தை பெரியாரின் கொள்கை பலத்தை நம்பியே பாசறை நடை போட்டது. 1996 இல் “பெரியார் பாசறை” தென்மாவட்டங்களில் தொடங்கி பரப்புரை செய்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தது.
“பெரியார் பாசறை”- பெரியார் படத்தை துண்டறிக்கையில் போடுகிறது, கருப்புச்சட்டை அணிகிறார்கள்… திராவிடர் கழகத்திற்கும் பாசறைக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பதால் திராவிடர்கழகத்திலிருந்து தனித்து காண்பிக்க தனியாக கொடி வடிவமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. திராவிடர் கழக கொடி சொல்லும் அதே கருத்தை சொல்ல வேண்டும் ஆனால் வேறுபாடும் தெரிய வேண்டும் என்பதால். கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம் கொண்ட கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது.பாசறை தோழர்கள் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
அந்த கொடிக்கான விளக்கத்தை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அறிவித்தார். அதில் கருப்பு நிறம் – பழமைவாதம் மூடநம்பிக்கை உள்ள சமூகத்தையும், சிகப்பு நட்சத்திரம் – பகுத்தறிவு புரட்சியாக நடுவில் இருந்து பெரியார் சொன்ன ஐந்து கொள்கைகளாக விரிந்து அந்த கருப்பு சிகப்பாக மாறும் என்பதே ஐமுனை நட்சத்திரம்.
முனை 1: சாதி ஒழிப்பு
முனை 2: மதமூடநம்பிக்கை ஒழிப்பு
முனை 3: பெண்ணுரிமை
முனை 4: உலக தமிழருக்கான நலன்
முனை 5: தமிழருக்கான நாடு
என கொடிக்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
பாசறையின் தூண்களாய் விளங்கிய மறைந்த பெரியவர் இராம.கணேசனார், செ.பால்துரை, சு.இலட்சுமணன், ந.முருகேசன், க.மதன் & வே.பால்ராசு போன்ற தோழர்கள் கொடியினை தென் மாவட்டங்களில் பறக்க உதவினர். முதல் கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் பால்.பிரபாகரன் வீட்டில் ஏற்றப்பட்டது. இரண்டாவது கொடி மறைந்த பெரியவர் இராம.கணேசனார் இல்லத்தில் ஏற்றிவைக்கப்பட்டது.
பெரியார் பாசறை தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமான போது உறுப்பாய் விளக்கியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமாக பேசுகின்ற போதே பாசறை கொடியே த.பெ.தி.க கொடியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் மூன்று பெரிய அமைப்புகள் சேரும் போது. அந்த பெரிய அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விடுதலை .இராசேந்திரன் பொதுச்செயலாளராக விளங்கிய பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டு கோவை.கு.இராமகிருட்டிணன் பொதுச்செயலாளராக விளங்கிய தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் கொடியான கருப்பு சிகப்பு கருப்பு கொடியானது அமைப்பின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆம் கருப்பு சிகப்பு கருப்பு தந்தை பெரியார் திராவிடர் கழக கொடியாக மாறியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளைஞர் பட்டாளத்தை தன் வசப்படுத்தி தொடர் போராட்டங்களால் தமிழகத்தை தன் பக்கம் பார்க்க வைத்தது. அப்போது கருப்பு சிகப்பு கருப்பு கொடியினை அரசியல் கட்சி கொடியாக மக்கள் பார்க்கத்தொடங்கினர்.
ஒரு அரசியல் கட்சி (மதிமுக) கொடியா? என கேட்கத்தொடங்கினர். இதனை தந்தை பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்றக்குழு கூடி விவாதித்து இயக்கத்தின் பெயரை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றியும் இயக்கத்தின் கொடியினை மாற்ற முடிவு செய்து மாவட்ட கழகங்களுக்கு வடிவமைத்து வழங்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் கொடியினை மாற்ற வேண்டாம் என்றும் தமிழகம் முழுமையும் மாற்றி ஆக வேண்டும் என விரும்பினால் பெரியார் பாசறையின் கொடியை (கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம்) பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மாநில ஆட்சிக்குழு பரிசீலித்து பெரியார் பாசறை கொடியினை பெரியார் திராவிடர் கழகக்கொடியாக ஏற்றுக்கொண்டது.
கொடியினை முறையாக ஈரோட்டில் சென்ற 2006 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக மாநாடான சாதி ஒழிக்க பெரியார் சட்டம் எரித்த 50 ஆண்டு நிறைவு சாதி ஒழிப்பு மாநாட்டில் கொடியினை ஏற்றி வைக்கும் வாய்ப்பை கொடியினை உருவாக்கிய பெரியார் பாசறை அமைப்பாளரும், பெரியார் திராவிடர் கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான பால்.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கியது பெரியார் தி.க. தலைமை. கொடியினை உயர்த்தி வைத்து கொடி குறித்து நெகிழ்ந்து அவர் ஆற்றிய உரையினை “பெரியார் முழக்கம்” வெளியிட்டது. ஆம் அவர் உரையில் குறிப்பிட்டதை போல் பாசறை கொடி தமிழ் நாடு முழுமையும் பறக்குமா? என்ற கேள்விக்கு விடைகிடைத்தது. அந்த கேள்வியோடு தூத்துக்குடி நகரத்தில் பாசறை கொடியேந்தி வந்த மாவீரன் மறைந்த பெரியவர் இராம.கணேசனாருக்கு மட்டும் பதில் தெரியவில்லை பாசறை கொடி தமிழகத்தில் எங்கும் பறக்கிறது என்ற உண்மை.

Tuesday, May 1, 2012

அய்யா!! கலைஞரே!! இளையதலைமுறையினை இழிவா கருதவேண்டாம்...

ஈழத்தமிழன் இதயங்களில் மட்டுமல்ல உலகத்தமிழனின் மனங்களிலும் மரணித்துப்போன முன்நாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களே!!

வஞ்சகத்தின் வாள்வீச்சால் காயம்பட்ட இதயத்துடன் வாழ்ந்துகொண்டிடுக்கும் ஈழத்தமிழனாகிய நான் அடிமனதில் ஆத்திரத்துடனும் சில ஆதங்கத்துடனும்  காலத்தின் கட்டாயத்தில் புலத்தில் இருந்து உங்கள் மீது ஏவுகின்ற ஒரு ஏவுகணை என்றே கருதி இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்புகின்றேன்.

எனது அன்றாட வேலைகளை விடுத்து இந்த கடிதத்தை எழுதுவதற்காக ஒரு சில நிமிடங்களை செலவிடுவதை  நினைத்து மிகவும் வருத்தமும் வேதனையும் கொள்கின்றேன்.

எனது மனதிலே மரணித்துப்போன உங்களுக்கு  நான் எழுதும் இந்த கடிதம் வெறும் கடதாசியில் எழுதுகோல் கொண்டு எழுதி அனுப்பவில்லை. ஆத்திரத்தில் கொதிக்கும் உதிரத்தால் நெருப்புத் துண்டிலே வரையப்படும் ஒரு மடல் நிச்சயமாய் உங்கள் மனச்சாட்சிய சுட்டெரிக்கும் என நம்புகின்றேன்
அய்யா !! கலைஞரே!! ஈழத்தமிழன் என்ன ஈனப்பிறவி என்று நினைத்தீர்களா?? சொல்வதையெல்லாம் கேட்டு தலையாட்டி அடிமாடாய் விலைப்பட்டுப்போக  இன்றைய இளைய சமுதாயத்தினரை இழிவானவர்கள் என்று நினைத்தீர்களா??

எட்டிப்பார்க்கும் தூரத்தில் எமன் வந்து நிற்கின்றான். இன்னமும் ஏன் இந்த ஈனவாழக்கை?? அய்யா வேண்டாம் இன்னொருமுறை உங்கள் வாயில் ஈழம் என்ற சொல்லை உச்சரிக்கவே வேண்டாம்!! எங்கள் இதயம் வலிக்கிறது
மானம் மறந்து மாற்றான் காலைப்பிடித்து வாழ ஈழத்தில் பிறந்தவர் எல்லோரும் கருணாநிதிகள் அல்ல – அங்கே பிறந்த ஒவ்வெருதமிழனும் “பிரபாகரன்கள்” கருணாநிதிகள் எல்லோரும் மே-18-2009-அன்றுடன் புதைக்கப்பட்டுவிட்டனர் என்ற உன்மையினை என் தமிழ் சொந்தங்கள் நடந்து முடிந்த தேர்தலிலே சொல்லியிருந்தனர்.

மரணித்துப்போன நீங்கள் மறுயென்மம் எடுக்க எத்தணிக்கும் நோக்கம் என்ன?? ஈழத்தமிழன் இரத்தம் சிந்தி வீழும்போது இழகாத உங்கள் இதயம் இன்று இழகிப்போனதற்கான காரணம் என்னவோ??

கடதாசியில் எழுதிவிட்டு அதை அழிப்பதைப்போல இதயத்தின் பதிவுகளை அழித்துவிட முடியாது.!! இன்றய இளைய சமுதாயம்   அரசியல் போரியல்யூகம்  பூலோக அசரியல் என்ற அனைத்திலுமே மிகமிக வேகமாகவும் விழிப்பாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

உங்களின்  இந்த அறிக்கைகளும் சவால்களும் எங்களை சினம்கொள்ள வைக்கின்றது.

அசரியல் என்ற ஒரு புனிதமான தீர்த்தக்கோணியில் உங்களைப் போன்றவர்கள் குதிப்பதால்தான் அது சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கின்றது.

தமிழ் ஊடகங்களை உங்கள் அரசியல் விளம்பர பலகையாக பயன்படுத்தி  தமிழீழம் மீட்காது நான் சாகமாட்டேன் ‘ என்று அறிக்கை பதிவு செய்தீர்கள் உங்கள் நாக்கு கொஞ்சம் கூட வலிக்கவில்லையா?? அதேவேளை உங்களைப்பற்றிய செய்திகளை பிரசுரிப்பதற்கும் சில ஊடகங்கள் இருப்பதை நினைத்து ஆத்திரம் அடைகின்றேன்.

அய்யா முத்தமிழ் வித்தகரே!! முள்ளிவாய்க்கால் மண்ணிலே விண்ணதிர ஈழத்தமிழன் அவலக்குரல் இட்டபோது தனி ஈழம் சாத்தியம் இல்லை என்று சென்னது யார்?? ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த அண்ணன் சீமான் அண்ணன் திருமாவளவன் எங்கள் இதயத்தின் துடிப்பாக துடித்துக்கொண்டிருக்கும் அண்ணன் வைகோ பழநெடுமாறன் ஆகியோரை ஈழத்துக்கு ஆதரவாக பேசக்கூடாது என்று தடுத்தது மட்டுமல்லாது எத்தனையோ முறை சிறையிலே அடைத்ததும் யார் ???

இதையெல்லாம் செய்தது நீங்கள்தானே!! ஒருமுறை கண்ணாடியிலே உங்கள் முகத்தைப் பாருங்கள் அதுகூட உங்கள் முகத்தில் காறி உமிழ்ந்துவிடும் – ஈழத்தமிழரைப் பொறுத்தவரை மாவீரர்களே!! காவல் தெய்வங்கள், அப்படிப்பட்ட தெய்வங்களையும் கேவலப்படுத்தியவர் நீங்கள்தானே! மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டியதைவிட வேறு காரியத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்று  அறிக்கை விட்டவர் யார்?  காலம் கடந்துபோனால் என் துரோகம் மறைந்துபோகும் என்று மனதிலே நினைத்தீர்களா?? மறப்பது மட்டும் அல்ல எக்காலத்திலும் மன்னிக்கவும் மாட்டோம்.

அன்று முள்வேலிக்குள் முடக்கப்பட்ட தமிழன் உதவிக்கரம் நீட்டியபோது சோனியா சோனியா சொக்கத்தங்கம் சோனியா என்று ஆடல் பாடலாக மும்பைக்கும் தமிழகத்துக்குமாய் பறந்து உங்கள் பதவியினை தக்கவைத்துக் கொண்டீர்கள் மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து அன்று மட்டும் நீங்கள் பதவி விலகியிருந்தால் போர் நிறுத்தப்பட்டு அத்தனை உயிர்களும் மீட்கப்பட்டிருக்குமே!!

விபச்சாரி கழுக்கும் கூத்தாடிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் உங்கள் ஊடகங்கள் ஈழத்தில் நடந்தபோர் குற்ற ஆதாரங்களை வெளிடமறந்தது ஏன்?? ஈழத்திலே கொடூரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்தபோதும் “மானாட மயிலாட பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தீர்களே!! இதைவிட கேவலமான ஒரு விடயத்தை ஊடக தர்மத்தை மீறியும்  உங்கள் ஊடங்கங்கள் “நடிகை ரஞ்சிதாவும் சாமியரும்” செய்த திருவிளையாடல்களை நிமிசத்துக்கு ஒருமுறை ஒலிபரப்பியது அதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில்கூட ஈழத்தமிழரது அவலங்களை ஒலிபரப்ப மறுத்ததும் நாங்கள் மறக்கவில்லை!

அய்யா வயோதிபரே தமிழீழம் மலரமுன்னே நீங்கள் உயிர்துறந்து விடுங்கள் மலரப்போகும் தமிழீழத்தை பார்க்கும் தகுதிகூட உங்கள் கண்களுக்கு இல்லை – ஈழத்தமிழினத்துக்கு காலத்தால் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துவிட்டு மீண்டும் ஈழம் என்ற சொல்லை வைத்து ஆட்சியை கைப்பற்ற நினைப்பது எங்களுக்கு புரியாது என்று நினைத்து நீங்கள் வடிக்கும் நீலிக்கண்ணீர் இளையவர்களான எங்களை ஆவேசம் கொள்ள வைக்கின்றது.
அண்ணன் முத்துக்குமரன் மூட்டிய விடுதலைத்தீ உறங்கிக் கிடந்த தமிழகத்தை தட்டி எழுப்பிவிட்டது. உங்கள் மந்திரத் தமிழுக்கு இனியும் மாங்காய்கள் வீழப்போவதில்லை.  ஈழத்தமிழனையும் இன்றய இளையோரையும் இழிவாக நினைத்து உங்கள் நாடகத்தை அரங்கேற்ற நினைக்கவேண்டாம்!! இது இளையோர்கள் சார்பாக நான் விடுக்கும் ஒரு எச்சரிக்கை. எங்கள் கோபத்தை கிழறவேண்டாம்!! எங்கள் உணர்வுகளை சிதைக்கவேண்டாம். இன்னொரு கருணாநிதி தமிழ் மண்ணிலே பிறக்கவேண்டாம்!! எங்கள் மனங்களில் மரணித்துப்போன நீங்கள் மரணக்கிடங்கிலே இருக்கும் பிணமாகவே இருங்கள் மீண்டும் எழுந்து நடக்க எத்தனித்தால் உங்கள் கால்கள் தறிக்கப்படும் எச்சரிக்கை!!

நன்றி
ஆதித்தன்
இளைய தலைமுறையினர் சார்பாக

Friday, April 27, 2012

ஏன் ஒன்றுக்கும் உதவாத ‘திராவிட’ எதிர்ப்பு? முதலில் திராவிட வரலாறு தெரிந்து கொள்வோம்

திராவிடக் கட்சிகள் அசைக்க முடியாமல் ஐம்பது ஆண்டுகாலம் தமிழகத்தில் கோலோச்சி இருக்கிறதென்றால் அதன் வீரியம் இன்றைய தலைமுறை வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்றால் இன்றைய திராவிட இயக்கங்களும் திராவிட இயக்கத்தலைவர்களும் மட்டும் காரணமில்லை. குறைந்தது நூறாண்டுகள் சென்றாவது அரசியல் வரலாற்றை ஆய்வு செய்யவேண்டும்.



நிகழ்கால அரசியல் அரங்கில் பெருமளவிலான விவாதங்கள் நடப்பது, “இன்றைய தேவை திராவிடக் கொள்கையா? தமிழ்த்தேசியக் கொள்கையா?” என்பதில்தான். திராவிடக் கட்சிகளுக்கு தனியாக திராவிடக் கொள்கையென இல்லையென்பதையும் அதன் செயற்பாடுகளும் கொள்கையும் தமிழ்த்தேசியத்தை நோக்கிதான் உள்ளது என்பதனையும் ‘திராவிடம் எங்களுக்கான அரசியல் பெயர்தான் என்பதனையும் எனது முந்தைய இரு கட்டுரைகளில் (பார்க்க www.thamilinchelvan.wordpress.com) விளக்கியுள்ளதால் திராவிடக் கட்சிகளின் செயற்பாட்டு அலசலை மட்டும் இவ்வேளையில் காணலாம்.

அதற்கு முன் இரண்டு வாதங்கள். இங்கே எந்த திராவிட கட்சியினரும் தன்னை ‘திராவிடன்’ என்று கூறிக்கொள்வதில்லை. ‘திராவிடன்’ என்பது தேசியம் அல்ல. அது ஒரு குறியீட்டு பெயர். அதேபோல திராவிட தேசியம் என்றேல்லாம் யாரும் கோரவில்லை. ‘திராவிடம்’ என்பது மொழிக் குடும்பத்தின் பெயர்தான், அதையும் நாம் கூறிக்கொள்ளத்தேவையில்லை என எனது முந்தைய கட்டுரைகளில் தெளிவுப்படுத்தியுள்ளேன்.

வட இந்தியாவில் பெரும் அரசியல் புரட்சியாளர்கள், அரசியல் தளகர்த்தர்கள் என அறியப்படும் ராம்விலாஸ் பஸ்வான், ஜோதி பாசு, சரத் பவார் போன்றவர்கள் தங்கள் சாதிப்பெயரை தன்னுடன் இணைத்தே வாழ்ந்துள்ளதை காணலாம். பல ஆண்டுகளாக இந்திய அரசியல் வரலாற்றில் எண்ணற்ற ‘போஸ்’களும், ‘படேல்’களும் ‘சாஸ்திரி’களும் ‘பானெர்ஜி’களும் நிறைந்து சாதியப் பெயரோடு அரசியல் புரட்சிகள் புரிந்ததையும் பார்க்கிறோம். இங்கே தமிழகத்தில் சாதிக்காக கட்சி நடத்தும் ராமதாஸ், ஜான்பாண்டியன் உள்ளிட்டவர்கள் கூட சாதிப்பெயரை தங்களுடன் இணைத்துக்கொள்ளாமல் இருப்பதையும் காண்கிறோம். இத்தகைய புரட்சிகர மாற்றம் ஏற்பட திராவிட இயக்கத்தின் பங்கு அளப்பெரியது. ஓர் நாளில் நிகழ்ந்துவிடவில்லை இம்மாற்றம். அதற்கான உழைப்பும் அர்ப்பணிப்பும் சொல்லிலடங்காதவைகள்.
இவ்வளவு ஏன், 1951 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் வகுப்புரிமை போராட்டத்தின் விளைவால்தானே இந்திய அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. பார்ப்பனிய ஏகாதிப்பத்தியத்திற்கு எதிரான போரை நடத்தி தமிழனின் அடிமைத்தனத்தை உணர்த்தியது திராவிட இயக்கமன்றி வேறு யார்?

இந்தியா முழுக்க இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான அலை உருவானாலும், தமிழகத்தில் இருந்து மட்டும் புரட்சிகர குரல் ஒலிக்கும். அவ்வளவு அழுத்தமாக புரட்சி விதைகள் இங்கே விதைக்கப்பட்டுள்ளது என்பதனையும் அதற்கு திராவிட இயக்கங்களின் அளப்பரிய தியாகங்களையும் நாம் மறந்துவிட முடியாது.

தமிழகத்தில் தனது மகனையோ மகளையோ கல்லூரிகளில் சேர்க்கப்போகும் தருவாயில் தனது பிள்ளைக்கு இடஒதுக்கீட்டு முறையில் ‘இந்த’ கல்லூரியில் ‘இந்த’ துறையில் இடம் கிடக்கும் என பெருமைபடும் தந்தையும் தாயும் பிள்ளைகள் படித்து முடித்தவுடன் இட ஒதுக்கீட்டு முறையை விமர்சிப்பதை நாம் கண்டுகொண்டுதானே இருக்கிறோம்.

இட ஒதுக்கீட்டு முறையில் வாய்ப்பினை பெற்று பெரியாரின் திராவிட கழகத்தினால் விழிப்புணர்வு பெற்று பயனடைந்து, இன்று இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான வசனத்தை திரைப்படங்களில் வைக்கும் திரைப்பட இயக்குநர்களையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

இவர்களது கூற்றைப்பார்க்கும் பொழுது தோழர் மதிமாறனின் “என்ன செய்து கிழித்தார் பெரியார்” கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

இவர்களுக்கு அரசியல் தெரியாமல் இல்லை. சந்தர்ப்பவாதிகளாக இருக்க பழகிக்கொண்டார்கள். இவர்களுக்கும் பெரியாரையும் திராவிடக் கட்சிகளையும் எதிர்க்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

தமிழகத்தில் இன்றளவும் தமிழ்த்தாய் பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுவது திராவிட இயக்கத்தினர்களால்தான். கொளத்தூர் மணி அண்ணன் சொல்வது போல தமிழ்த்தேசியவாதிகள் என்றும் திராவிடக் கட்சியினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் நடத்தும் தாய்தமிழ் பள்ளிக்கூடங்கள் பட்டியலை எடுத்தாலே யார் தமிழ்மொழிக்கு சேவை செய்கிறார்கள் என்று தெரியும். யேல் பல்கலைக்கழகம் சென்று அமெரிக்கர்களுக்கு திருக்கிறள் பாடம் நடத்தி தமிழின் பெருமையை பறைச்சாற்றியவன் திராவிட இயக்கத்தின் தலைவன்தான். திருக்குறளின் பெருமையை அரசியல் தளங்களிலும் பொது மக்களின் நெஞ்சங்களிலும் விதைத்தவர்கள் திராவிட இயக்கதினர்தான் என்பதனை மறந்துவிட முடியாது. தமிழ்மொழி மீது இன்றைய தலைமுறை பெரும் ஈர்ப்பில் திகழ்வதற்கும் தமிழிலக்கிய சொற்பொழிவுகளை மேடைதோறும் கேட்க முடிவதற்கும் இன்றைய திராவிட இயக்கத்தின் பேச்சாளர்களும் மேடைகளும்தானே காரணம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும்துணையாக இருந்து பங்காற்றியது திராவிட இயக்கத்தினர்தான் என்பதனை யாராலும் மறுக்கமுடியுமா? கொடும் சிறைவாசத்தையும் சொல்லண்ணாத் துயரங்களையும் தாங்கிக்கொண்டு களம் நின்றவர்களும் வீதிகளில் அரசியல் போர் புரிந்தவர்களும் திராவிட இயக்கத்தினர்தானே. ஏன், இன்று கூட தமிழ்த்தேசியம் பேசும் அனைத்து தலைவர்களுக்கும் ‘பாலர்’ பள்ளிக்கூடம் திராவிட இயக்கம்தானே.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும் பேசலாம். ராஜீவின் மரணத்திற்கு பிறகு பல அடக்குமுறைகளுக்கு ஆளானபொழுதும் தமிழக மக்களிடத்தில் தமிழின தாக்கத்தை தக்கவைத்தது திராவிட இயக்கம்தானே. கருணாநிதி தமிழின உணர்ச்சியை தக்கவைத்தாரோ இல்லையோ அவரது பெயரையும் ஆட்சியையும் காரணம்காட்டி தமிழ்த்தேசியத்திற்கான தாக்கத்தை கற்றுக்கொண்டவர்களும் தமிழ்த்தேசியத் தாக்கத்தை விதைத்தவர்களும் ஏராளம். இதனை யாரும் மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

‘முள்ளிவாய்க்கால்’ நேரங்களில் வீதியில் அடிபட்டவனும் மிதிபட்டவனும் திராவிட இயக்கத்தின் தொண்டர்கள்தானே. இதில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் விதிவிலக்கு. அண்ணன் திருமாவளவன் அவர்களின் இன்றைய அரசியல் செயற்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளானாலும் பாமர மக்களின் நெஞ்சத்தில் தமிழ்த்தேசிய விதையை விதைத்தவர் என்ற நோக்கில் அவரை மதிக்காமல் இருக்கமுடியாது.

‘முள்ளிவாய்க்கால்’ காலத்தில் இந்திய இராணுவ வாகனத்தை தடுத்து பெரும்போர் புரிந்தவர்கள் திராவிட இயக்கத்தினர்தான் என்பதனை இன்றைய நவீன தமிழ்த்தேசியவாதிகள் உணரவேண்டும்.

ஓர் அழிவிற்கு பிறகு புது சித்தாந்தங்கள் பிறப்பதும் அவ்வழிவில் இருந்து புது தலைமுறையும் தலைமைகளும் கட்சிகளும் உருவாவது இயற்கை. அவர்கள் செயற்திட்டங்களும் கொள்கைகளும் சரியாக நிற்கும்வரை மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், அவர்களை வளர்த்துவிட்ட மரத்தினை வெட்டிவிட்டுத்தான், தங்கியிருந்த வீட்டை இடித்துவிட்டுத்தான் புதிய தளத்தை அமைப்பேன் என்பது பைத்தியக்காரத்தனமாக இல்லையா?
இன்றைய காலத்தில் நமது தேவை தமிழ்த்தேசியக் கொள்கையா? திராவிடக்கொள்கையா? என்ற வாதமே வீணானது. திராவிடம் என்பது அரசியல் பெயர். அதன் பெயர்க்காரணத்திற்கான களமும் அரசியலும் வேறு. தமிழ்த்தேசியத்திற்கான களமும் அரசியலும் வேறு. இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து வீணான குழப்ப அரசியலை செய்ய முன்வருவது நமது கழுத்தை நாமே அறுத்துக்கொள்ளும் பைத்தியக்காரத்தனத்திற்கு ஒப்பானதாகும்.

பெரியாரின் திராவிட கட்சியின் வழியில் வந்த கட்சிகள் ‘திராவிட’ என்ற பெயரையும் புதிதாக முளைக்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ‘தமிழர்’ என்ற பெயரையும் தாங்கி நிற்கட்டுமே. மாற்றங்கள் உருவாவது இயற்கைதானே. ஏன் ஒன்றுக்கும் உதவாத ‘திராவிட’ எதிர்ப்பு?

நாம் இங்கே முரண்படுவதால் நமக்குள் பிளவுபடுவதால் நாம் எதனையும் சாதித்துவிடமுடியாது என்பதனை அனைவரும் நினைவில் கொள்க. நமது கொள்கையிலும் இலக்கிலும் தவறுகள் ஏற்படும்பொழுது ஒவ்வொருவரும் சுட்டிக்காட்ட உரிமை உண்டு. அது நம்மை இணைப்பதற்கும் நம்மை வலிமைப்படுத்துவதற்குமாக இருக்க வேண்டுமே தவிர அங்கிருந்து சிதைவதற்காக இருக்கக்கூடாது.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் செய்த தவறுக்கெல்லாம் திராவிட இயக்கத்தின் தவறாக சித்தரிக்க முயலவேண்டாம் என கூறினால், மிகப்பெரிய அரசியலை இந்த இரண்டு பேரோடு மட்டும் முடிச்சி போட்டு தப்பித்துக்கொள்ள வேண்டாம் என எதிர்ப்பு குரல் கேட்கிறது. ஒன்றை சொல்லிக்கொள்கிறேன், கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜியார் தான் கடைசி ஐம்பது ஆண்டுகள் அரசியல் புரிந்ததும் ஆட்சியில் இருந்ததும். அண்ணாவின் காலத்திலும் பெரியாரின் காலத்திலும் நாம் அழிந்துவிடவில்லை. தமிழ்த்தேசிய உணர்ச்சி குன்றி இருந்திருக்கவில்லை. ஆக, நாம் அண்ணா, பெரியாருக்கும் பின் ஆட்சியில் இருந்தவர்களைத்தானே குறை கூற முடியும்.
மேடைகளில் முழங்கும் நவீன தமிழ்த்தேசியவாதிகளே! மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை யாரும் ‘திராவிடன்’ என அழைக்க விரும்பவில்லை. எந்த திராவிட இயக்கத்தினரும் தன்னை தமிழன் எனதான் அழைத்துக்கொள்கிறானே தவிர திராவிடன் என அழைத்துக்கொள்வதில்லை.


திராவிட இயக்கத்தின் கடந்த கால பங்கை மதிக்கிறோம், இன்றைய தமிழகத்தின் தமிழினத்தின் இழிநிலைக்கு காரணம் திராவிட இயக்கங்கள்தான். திராவிட இயக்கங்கள் உருவாகாமல் தமிழ்த்தேசிய அரசியல் இயக்கங்கள் உருவாகி இருந்தால் நாம் எதையும் இழந்திருக்க மாட்டோம் என சிலர் வாதிடுகின்றனர். திராவிட இயக்கங்கள் தோன்றி செய்ய முடிந்ததை செய்திருக்கிறது. இன்று தமிழ்த்தேசிய இயக்கங்கள் முளைவிடுகிறதென்றால் அவர்கள் செய்யவேண்டியதை செய்யட்டுமே. யாரும் தடுக்கப்போவதில்லையே. அதனைவிடுத்து நாங்கள் இருந்திருந்தால் அதனை செய்திருப்போம் இதனை செய்திருப்போம் என்பது அரசியலற்ற வாதமாகவேபடுகிறது.

அடுத்து தமிழன் யார் என இரத்தப் பரிசோதனை செய்யும் குணம் தமிழகத்தில் அதிகமாக நடந்துவருகிறது. வீட்டுமொழியை வைத்து இழிவுபடுத்தும் குணமும் அதிகமாகிவிட்டது. ஒரு வைகோவிற்காக விஜயகாந்த்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என அறிவிக்கும் தமிழ்த்தேசியவாதிகளே ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். தமிழின தமிழக நலனுக்கு பாடுபடும் ‘வைகோ’க்களும் இங்கு நிறைய இருக்கிறார்கள் தமிழ்ப்பேசும் தாய் தகப்பனுக்கு பிறந்துவிட்டு தமிழினத்திற்கு எதிராய் இருக்கும் ‘வாசன்’களும் ‘சிதம்பரம்’களும் இங்கு இருக்கிறார்கள். நாம் யாரை வரவேற்கிறோம் யாரை எதிர்க்கிறோம் என்பதே இங்கு முக்கியம். அதனைவிடுத்து இரத்தப் பரிசோதனை செய்வதால் தமிழ்த்தேசியம் வளர்ந்துவிடாது.

அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் உரையை இங்கு நினைவுபடுத்தி நிறைவு செய்கிறேன். “ஆட்டம் (Atom) என்ற சொல்லுக்கு லத்தீனில் பிளக்கமுடியாதது என்று பொருள். Dalton’s atomic theory சொல்கிறது…Atom is indivisible (அணு பிளக்கமுடியாதது) என்பதுதான். அப்போது நிலவிய விஞ்ஞான கொள்கை. ஆனால், இப்போது அதை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்கமுடியும் என்பதும், பிளக்கும்போது வெளிப்படும் அணுஆற்றலில் இருந்து பல்வேறு ஆக்க வேலைகளையும் அழிவு வேலைகளையும் செய்யமுடியும் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அணுவைப் பிளக்கமுடியாது என்று கருதிக்கொண்டிருந்த காலத்தில், பிளக்கமுடியாதது என்ற பொருளுள்ள Atom என்ற சொல்லை, பிளக்கமுடியும் என்று தெரிந்த பின்னாலும் Atom என்பதை மாற்றவில்லை. ஒரு சொல்லில் ஏற்றப்பட்டிருக்கும் உள்ளடக்கம் என்பதுதான் முக்கியம். அப்படித்தான் பெரியார், திராவிடர் என்ற சொல்லிற்கு ஓர் உள்ளடக்கத்தைக் கொடுத்துள்ளார்.

நன்றி – பென்னாகரம் தமிழ்ச்செல்வன்