Friday, April 9, 2010

தெரிந்தே செய்யும் தவறு

மாநில போலீஸார் மற்றும் மத்திய சிறப்புக் காவல் படையினர் உள்ளிட்ட 76 பேர் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாடு தழுவிய அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது.​ தொடர்ந்து தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருக்கும் காஷ்மீரில்கூட பாதுகாப்புப் படையினர் இந்த அளவுக்கு மோசமான தாக்குதலை எதிர்கொண்டதில்லை.
எந்த ஓர் அரசும் இதுபோன்ற வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.​ இதுபோன்ற தாக்குதல் இந்திய இறையாண்மைக்கும் மக்களாட்சித் தத்துவத்துக்கும் விடப்பட்ட சவால் என்று கருதுவதிலும் தவறில்லை.​ அரசின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத அரசின் ஆளுமைக்கு உள்படாத ஒரு பகுதி இருப்பதை எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாலும் ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ முடியாது.​ ​
தீவிரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என்பதிலும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும் தீவிரவாதமும் பயங்கரவாதமும் வளர்வதற்கு உதவும் காரணிகளையும் சூழலையும் களையாமல் துப்பாக்கியைத் துப்பாக்கியால் மட்டுமே எதிர்கொண்டு வெற்றியடைவது சாத்தியமா என்பது சந்தேகம்தான்.​ வீரவசனம் சினிமாவில் பேசிக் கைதட்டல் பெறுவதுபோல,​​ நிர்வாகத்தில் சாத்தியப்பட்டதாகச் சரித்திரம் உணர்த்தவில்லை.​ ​
மேற்கு வங்கம்,​​ ஒரிசா,​​ இப்போது சத்தீஸ்கர் என்று மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகள் பரந்து விரிந்துகொண்டே போவதை கடந்த மூன்று ஆண்டுகளாகவே நமது தலையங்கத்தில் எச்சரித்து வருகிறோம்.​ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருபது விழுக்காடாக இருந்து இப்போது ஏறத்தாழ இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி மாவோயிஸ்டுகளின் கையில் சிக்கியிருப்பதை வேதனையோடு குறிப்பிட்டே தீர வேண்டும்.
மாவோயிஸ்டுகள் இந்தியாவின் 16 மாநிலங்களில் ஊடுருவியிருக்கிறார்கள்.​ இந்தியாவில் உள்ள 460 மாவட்டங்களில் ஏறத்தாழ 175 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.​ காஷ்மீர்,​​ அசாம்,​​ வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் பிரிவினைவாதம் சார்ந்த தீவிரவாதம் இதில் சேராது.
மாவோயிஸ்டுகளின் முழு ஆளுமையில் இருக்கும் மாவட்டங்கள் 58.​ மாவோயிஸ்டுகள் ஓரளவுக்குப் பலமாக இருக்கும்,​​ ஆனால்,​​ இந்திய அரசின் ஆளுமை தொடரும் மாவட்டங்கள் 54.​ ஏனைய 83 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகரித்த வண்ணம் இருக்கிறது.​ கடந்த ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலில் பலியான காவல்துறையினர் ​(312 பேர்)​ பலியான மாவோயிஸ்டுகளைவிட ​(294 பேர்)​ அதிகம்.
இந்த அளவுக்கு மாவோயிஸ்டுகள் பலம் பெற்றதற்கு என்ன காரணம்?​ இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர்.
​ இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள்.
​ 1995 வரை இவர்கள் நிம்மதியாகக் காட்டை நம்பி வாழ்ந்து வந்தனர்.​ நமது வனத்துறை அதிகாரிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தனர்.​ இந்த வனப்பகுதியில் இந்திய அரசின் அதிகாரமும் ஆளுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.​ உலகமயமாக்கல் கொள்கையின் தொடர்ச்சியாக பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இந்த வனப்பகுதியில் குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் தாதுப் பொருள்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கிடைக்கப் போகும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அந்த நிறுவனங்களை இங்கே காட்டை அழித்துச் சுரங்கங்களை நிறுவ ஊக்குவித்தது.​ ​
கட்சி வேறுபாடின்றி எல்லா அரசியல் கட்சிகளும் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்தபோது ஆதிவாசிகள் மிரண்டனர்.​ தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் அவர்களை நடுக்கத்தில் ஆழ்த்தியது.​ பட்டணத்துத் தெருக்களில் கூலிகளாகவும்,​​ ரிக்ஷாக்காரர்களாகவும் அல்லாட அவர்கள் தயாராக இல்லை.​ அவர்களை வெளியேற்றி இந்தியாவின் கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​
தங்களுக்காகக் குரல் கொடுக்கவும் ஆதரவுக்கரம் நீட்டவும் எந்த அரசியல் கட்சியும் சமூக அமைப்பும் இல்லாத நிலையில் பேய்க்குப் பயந்து பூதத்துக்கு வாழ்க்கைப்பட்ட கதையாக அவர்கள் மாவோயிஸ்டுகளைத் தஞ்சமடைய வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது.​ இதுதான் மாவோயிஸ்டு அசுர வளர்ச்சியின் பின்னணி.
தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து பன்னாட்டு கனிம நிறுவனங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை வெற்றி பெறும் என்பதுதான் உண்மைநிலை.​ ஆனால் அரசோ,​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும்சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறது.​ இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியோ என்றுகூட நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.
இந்தியாவின் மையப்பகுதியில் ஓர் எரிமலை கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.​ அது வெடிப்பதும் வெடிக்காமல் போவதும் அரசின் அணுகுமுறையைப் பொறுத்துத்தான் இருக்கிறது.​ நிதியமைச்சராக இருக்கும்போது ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நமது மத்திய உள்துறை அமைச்சர் தலையங்கத்துக்குக் கீழே தரப்பட்டிருக்கும் குறளைப் படித்து அதன்படிச் செயல்பட்டாலொழிய இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று நாம் நம்பவில்லை.​ ​

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து,​​ நோயின் காரணம் ஆராய்ந்து,​​ அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து,​​ உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும்.
திருக்குறள் ​(எண்:​ 948) அதிகாரம்:​ மருந்து