அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை தொடர்பான விசாரணை கிளைமாக்ஸை அடைந்துள்ளது. இந்த கிளைமாக்ஸ் தமிழகத்தில் கிளைமோர் குண்டுபோல வெடிக்கக்கூடும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், முக்கியமான ஒரு காரணம், குற்றவாளிகள் பட்டியலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அவரது இளவல் அன்புமணி ஆகிய இருவரும் உள்ளனர்.
இவர்கள் இருவருமோ, அல்லது இருவரில் ஒருவரோ விரைவில் கைது செய்யப்படலாம் என்பதே சி.பி.ஐ. வட்டாரங்களில் அடிபடும் கதை.
கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம். உண்மையில் இவரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட ஆட்களே, இவரது உறவினரைக் கொன்றிருந்தனர். அமைச்சர் கார் ஒன்றின் அடியே பதுங்கி தப்பித்துக் கொண்டார். கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், மற்றும் அன்புமணியை சேர்க்க வேண்டும் என்று போராடியவரும், அமைச்சர் சண்முகம்தான்.
விசாரணை கிளைமாக்ஸை அடைந்துவிட்டது என்று எப்படி சொல்கிறோம் என்றால், நேற்றிரவு அமைச்சர் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் இருந்து சில தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இது அமைச்சரின் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தால்தான், பதவியில் உள்ள அமைச்சரின் வாக்குமூலம் பெறப்படும் என்பது சி.பி.ஐ. நடைமுறை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. தாம் விசாரிக்கப்பட்ட விஷயம் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அப்படியிருந்தும் கதை லீக்காகி விட்டிருந்தது.
ராமதாஸ் மற்றும் அன்புமணியை விசாரித்தபின் அதன் தொடர்ச்சியாக, திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் நகரச் செயலர் (அ.தி.மு.க.) சேகரிடம் விசாரணை நடத்தினர் சி.பி.ஐ. அதிகாரிகள். கொலையாளிகள் பயன்படுத்திய காரை அவர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
அதன்பின் இரண்டாவது தடவையாக அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் திண்டிவனம் செல்ல தயாரானபோது, சேகர் சென்னையில் அமைச்சர் சண்முகத்தின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சேகரிடமும், அமைச்சரிடமும் தமக்கு தேவையான தகவல்களைப் பெற்று, அவர்களது வாக்குமூலங்களிலும் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.
சி.பி.ஐ. நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு, கேஸ் விசாரணை இறுதிக்கட்ட ராப்-அப்பில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். போதிய ஆதாரங்கள் இருந்தால், அநேகமாக இன்னும் சில நாட்களில் டாக்டர் ஐயா வீட்டுக் கதவு தட்டுப்படலாம்!
