Monday, April 2, 2012

போயஸ் கார்டனில் காலடி வைத்த சசிகலா : “மவனே நீர் தொலைந்தீர்!”

    100 நாட்களுக்குமுன் போயஸ் கார்டனில் புதிதாக வந்த பாதுகாப்பு அதிகாரிகள், கார்டனின் ரூம்களில் மாற்றங்களை செய்தவர்கள், புதிதாக கணக்கு விவகாரங்களை கவனிக்கத் துவங்கியவர்கள் அனைவரும் திக்திக் மனநிலையில் நின்றிருக்க, நேற்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் சசிகலா மீண்டும் கார்டனில் காலடி வைத்தார். அவருடன் இளவரசியும் வந்து சேர்ந்தார்.
     சசிகலா வெளியேற்றப்பட்டு வெளியேயிருந்த நாட்களின் ஆரம்பத்தில் இளவரசி சில நாட்கள் கார்டனில் தங்கியிருக்க முடிந்தது. அதன்பின் அவரும் வெளியேற்றப்பட்டிருந்தார். அதன்பின் இரு தடவைகள் சசிகலா கார்டனுக்கு வந்ததாக தகவல் உண்டு.
       “அந்த நாட்களில் இரு தடவைகளும் இளவரசி வந்தபோது, அவரை உள்ளே அழைத்து அமர வைத்த நபர் இப்போது ராஜாதான்” என்று நினைக்கிறீர்களா? அதுதான் கிடையாது. அவர்தான் மற்றைய கிடுகிடுவாதிகளைவிட மகா நடுக்கத்தில் இருப்பார்.
        காரணம், அவர் இளவரசியை கார்டனுக்குள் அமரவைத்த இடம், சாதாரண பார்வையாளர்கள் காத்திருக்கு வரவேற்பறை!
    கார்டனை ஆண்ட பரம்பரையில் ஒருவர், அடையாளம் அற்றவர்போல வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டதை, ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு, விட்டுவிடுவார் என்று ஊகிப்பவர் நீங்களாக இருந்தால், உங்களுக்கு ரொம்பவும் பெரிய மனசு.
  வரவேற்பறையில் அமர வைத்தவரின் தலையில் தெளிவாக எழுதப்பட்டுள்ள வாக்கியம் – “மவனே நீர் தொலைந்தீர்!”
   ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளில், சசிகலாவின் நம்பிக்கைக்கு உரிய இருவர் தற்போது இல்லை. அந்த இடத்தில் வேறு இருவர் உள்ளனர். அவர்கள் இருவரும் பெட்டி படுக்கைகளை கட்டத் துவங்கியிருப்பார்கள். கார்டனில் சசிகலா தங்கியிருந்த ரூமில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்தியவர்களை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
  கார்டனுக்குள் காலடி வைத்த சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்து ரவேற்பு கொடுக்கப்பட்டது என்று கார்டன் வட்டாரங்களில் சொல்கிறார்கள். முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்ட சசிகலா, அங்கே இருந்த புதியவர்களையும் பார்த்து நட்புடன் சிரித்தார் என்று சொல்லி ஆறுதல் அடைகிறார்கள், அங்கு சிக்கலுக்கு உள்ளாக சான்ஸ் உடைய சிலர்.
ஏதோ, அவர்களுக்காவது நல்லது நடந்தால் சரி.